மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி லீக் சுற்றில் சேலம் அணி அபார வெற்றி
சேலம்:சேலம் இரும்பாலை மற்றும் சூரமங்கலம் நீலாம்பாள் பள்ளியில் மாநில அளவில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ல் துவங்கியது.சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் அணியினர் விளையாடி வருகின்றனர். ஆகஸ்ட் 28ல் நடந்த லீக் போட்டியில், சிவகங்கை அணியும், புதுக்கோட்டை அணியும் மோதின. இதில் 142 ரன்கள் வித்தியாசத்தில் புதுக்கோட்டை அணி வெற்றி பெற்றது.நேற்று நீலாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சேலம் கிரிக்கெட் அணியும், புதுக்கோட்டை அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சேலம் அணியினர் 50 ஓவர்களில் 270 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக சேலம் அணி வீரர்கள் ஜெயசீலன் 82 ரன்னும், விகேஷ் சர்மா 43 ரன்னும் எடுத்தனர்.
அதன்பின்னர் பேட் செய்த புதுக்கோட்டை அணி, சேலம் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணி 42 ஓவர்களில், 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. சேலம் அணி199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இரும்பாலையில் நடந்த மற்றொரு போட்டியில் சிவகங்கை அணியும், திருவாரூர் அணியும் மோதின. இதில் சிவகங்கை அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நீலாம்பாள் பள்ளியில் நடக்கும் போட்டியில் சேலம் அணியும், திருவாரூர் அணியும், இரும்பாலையில் நடக்கும் போட்டியில் புதுக்கோட்டையும், தஞ்சாவூரும் மோதுகின்றன.
--தினமலர்