சேலம் மாநகரில் போக்குவரத்து விதி மீறலை தடுக்க "ஸ்பாட் ஃபைன்" அவசியம் போலீஸ் கமிஷனர் கருத்து

சேலம்: "சேலம் மாநகரில் போக்குவரத்து விதி மீறலை தடுக்க வேண்டுமெனில், "ஸ்பாட் ஃபைன்" திட்டத்தை அவசியம் அமல்படுத்த வேண்டும்", என, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் தெரிவித்தார்.

சேலம் மாநகரத்தில் ஏட்டாக பணியாற்றி பத்தாண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. சேலம் மாநகர போலீஸில் பத்தாண்டுக்கு மேல் பணி நிறைவு செய்த 59 ஏட்டுகளுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டதை அடுத்து, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின், போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் கூறியதாவது:சேலம் மாநகர போலீஸில் ஏற்கனவே இரண்டு "பேட்ஜ்'க்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டாலும், இவர்கள் ஏட்டு பொறுப்பில் தான் வைக்கப்படுவர். இவர்களுக்கு தனி பொறுப்போ அல்லது இவர்களுக்கு கீழ் பணியாற்ற "மென்'கள் அளிப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை. தொடர்ந்து இவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் வழக்கமான பணிகளை மேற்கொள்வர். எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு மூலம் சம்பள உயர்வு மற்றும் "கிரேடு' உயர்த்தப்படுகிறது.

சேலத்தில் "ஹெல்மெட்' அணிபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. "ஹெல்மெட்' அணியாமல் செல்வதால், அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை தான் வலியுறுத்தி வருகிறோம். சட்டத்தின் மீதான தனி மனித பயம், போக்குவரத்துக்கு கீழ் படிதல் உள்ளிட்டவை மூலம் விபத்தை தவிர்க்க முடியும். சேலம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாகன எண்ணிக்கை கூடுகிறது. பழைய சாலை, குறுகிய பாதைகளில் வாகனங்கள் பயணித்து செல்ல வேண்டியுள்ளது. வாகன எண்ணிக்கை ஏற்ற வகையில் சாலை அபிவிருத்தியும் வேண்டும்.

போக்குவரத்து விதி மீறியதாக அதிகளவு வழக்கு பதிவு செய்து, அபாராத தொகை முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வசூல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறும் வாகனங்களை போலீஸார் பிடித்தால், அவர்களிடம் தகராறில் ஈடுபடுபவர்களும் உண்டு. பெங்களூரு நகரத்தில் "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் உள்ளது. அதேபோல, சாலை விதி மீறும் வாகனங்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமரா மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமர்ந்து வீடியோவில் கண்காணிப்பு செய்து, அபராதம் வசூல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

"ஸ்பாட் ஃபைன்' முறையை அமல்படுத்துவதன் மூலம் சம்பவ இடத்தில் அபராதம் வசூல் செய்யப்படும். கேமரா மூலம் கண்காணித்து, விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்பது எளிதாக அமையும். நீதிமன்ற நடவடிக்கையால், "சம்மன்' அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். போக்குவரத்து விதி மீறல் குற்றங்களை தடுக்க, "ஸ்பாட் ஃபைன்' முறை அவசியம் வேண்டும், என்றார்.

--தினமலர்