சுதந்திர போராட்ட தியாகி மரணம்:சேலம் கலெக்டர் அஞ்சலி

சேலம் :வாழப்பாடியில் மரணமடைந்த, இந்திய சுதந்திர போராட்ட தியாகி பழனிவேலாயுதம் பிள்ளை உடலுக்கு, தமிழக அரசு சார்பில், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி வேலாயுதம்(92). அவர், வெள்ளையனே வெளியேறு இயக்கம், கதர் இயக்கம், சுதேசி இயக்கம், மதுவிலக்கு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு, ஆங்கிலேயே அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக வாழப்பாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர், நேற்று முன்தினம் மணியளவில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு, தமிழக அரசின் சார்பில், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், வாழப்பாடி தாசில்தார் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, வி.ஏ.ஓ., பிரகாசம் ஆகியோர் நேற்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் சொக்கலிங்கம், கவுன்சிலர் நவமணி, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜவஹர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

--தினமலர்